2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 2026 தேர்தலிலும் நாமே வெற்றி பெறுவோம் என்கிற திமுகவினர் நம்பினார்கள். குறிப்பாக திமுக முதல்வர் ஸ்டாலின் அதீத நம்பிக்கையுடன் இருந்தார். எல்லா மேடைகளிலும் திமுக 200 தொகுதியில் வெற்றி பெரும் என அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஆனால் 74 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. மாறாக விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதியில் வெற்றி பெற்று திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை வைத்து கூட்டணி ஆட்சியையும் தவெக அமைத்துவிட்டது..
இதையடுத்து, திமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என பொதுமக்களிடமும், நிர்வாகிகளிடமும் முக ஸ்டாலின் கருத்து கேட்டார். இதற்காக இணையதளமும், இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, பல லட்சம் கருத்துக்கள் அதில் குவிந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது..
இந்நிலையில் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கட்சிக்காரர்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை என இப்போதுதான் முக ஸ்டாலினுக்கு புரிய வந்திருக்கிறதாம். ஜூலை மாதம் முக ஸ்டாலின் லண்டன் செல்லவிருக்கிறார். 20 நாட்கள் லண்டனில் தங்கும் அவர் அங்கேயே கட்சி மறுசீரமைப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். அவர் ஊர் திரும்பியதும் சீனியர், ஜூனியர் என எந்த பேதமும் இன்றி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பலரின் மீதும் அவர் நடவடிக்கை எடுப்பார் என திமுகவினர் சொல்கிறார்கள்.

