தமிழ் திரையுலகின் மாபெரும் மைல்கல்லாகக் கருதப்படும் திரைப்படம் 16 வயதினிலே . 1977-ல் வெளியான இத்திரைப்படம், அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை நிஜமான கிராமத்து மண்ணுக்கும், மனிதர்களுக்கும் நேராகக் கூட்டிச் சென்றது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அறிமுக இயக்கத்தில் வெளியான இப்படம் கமல்ஹாசன் (சப்பாணி), ரஜினிகாந்த் (பரட்டை), ஸ்ரீதேவி (மயில்) ஆகிய மூவரின் திரைப்பயணத்திலும் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜாவிடம் இப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பின்னாளில் ‘திரைக்கதை திலகம்’ என்று போற்றப்பட்ட கே.பாக்யராஜ் ஆவார்.
சமீபத்தில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த, இதுவரை பலரும் அறியாத ஒரு நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு சம்பவத்தை கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கே.பாக்யராஜின் சுயசரிதையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரைப்படத்தில், சப்பாணியை (கமல்ஹாசன்) கொடுமைப்படுத்தும் பரட்டையை (ரஜினிகாந்த்), மயில் (ஸ்ரீதேவி) கோபமாகத் திட்டும் ஒரு முக்கியமான காட்சி. திட்டி முடித்ததும் ஆத்திரத்தில் பரட்டையின் முகத்தில் மயில் காரித் துப்ப வேண்டும் என்பதுதான் திரைக்கதை.
ஆரம்பத்தில், ஸ்ரீதேவி நிஜமாகத் துப்பத் தயங்கியதால், ரஜினியின் முகத்தில் போலி எச்சிலுக்காக சோப்பு நுரை பயன்படுத்தப்பட்டது. ஆனால், பலமுறை முயற்சி செய்தும் அந்த சோப்பு நுரை ரஜினியின் முகத்தில் சரியாக விழவில்லை. காட்சியின் இயல்பான வேகம் இதனால் பாதிக்கப்பட்டது.
காட்சியின் தீவிரத்தை உணர்ந்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவியிடம் வந்து, காட்சி தத்ரூபமாக வரவேண்டும், எனவே நீங்கள் என் முகத்தில் உண்மையாகவே துப்பிவிடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், ஒரு வளர்ந்து வரும் ஒரு நடிகரின் முகத்தில் துப்ப ஸ்ரீதேவிக்கு மனமில்லை. ஐயோ! என்னால் முடியாது என்று அலறிக்கொண்டு அங்கிருந்து ஓடினார்.
ஸ்ரீதேவி மறுத்துவிட்டதால், ரஜினி நேராக இயக்குநர் பாரதிராஜாவிடம் சென்றார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கோபம் வரவேண்டும் என்றால் இந்த காட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும். எனவே, நீங்களாவது என் முகத்தில் துப்புங்கள் என்று பாரதிராஜாவை வற்புறுத்தினார். பாரதிராஜாவும் பெரும் தயக்கத்துடனும், சங்கடத்துடனும் ரஜினியின் முகத்தில் துப்பினார்.
கேமரா கோணங்கள் சரியாக வைக்கப்பட்டு, அந்த காட்சி மிக தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் பார்க்கும் போது, ஸ்ரீதேவி நிஜமாகவே ரஜினியின் முகத்தில் துப்பியது போன்ற ஒரு பிரமையையும், ஆக்ரோஷத்தையும் அந்த காட்சி ஏற்படுத்தியது.
காட்சி படமாக்கி முடிக்கப்பட்ட அடுத்த கணமே, பாரதிராஜா ஓடிச்சென்று ரஜினிகாந்தைக் கட்டியணைத்துக் கொண்டார். தன் கையில் இருந்த கைக்குட்டையால் ரஜினியின் முகத்தைத் துடைத்துவிட்டபடியே, அவரது அர்ப்பணிப்பைக் கண்டு பாரதிராஜா கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் மிக அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர் உதவி இயக்குநர் பாக்யராஜ்.
நடிப்பு என்பது வெறும் நடிப்பு அல்ல; அது ஒரு கலைஞனின் உச்சகட்ட அர்ப்பணிப்பு!
– இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

