டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்களும் சிஜேபி இயக்கத்தினரும் நடத்தி வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் சில சமூக விரோதிகளும் தேசத்துரோகிகளும் ஊடுருவிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
போராட்டத்தின் போது கத்தி, வாள் மற்றும் கட்டைகள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கன்னாட் பகுதியில் நடந்த மோதலில் விரைவு அதிரடிப் டை வீரர் ஈஸ்வர் சிங் என்பவர் துரத்தி தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும், டோல்ஸ்டாய் மார்க் பகுதியில் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு மற்றும் வாள் வீச்சில் 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்தப் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் நிலைமையைச் சீர்செய்ய முயன்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர வழக்குப்பதிவு செய்து, ஆயுதங்களுடன் தாக்கியவர்களை அடையாளம் காண வீடியோ பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர்களின் நியாயமான போராட்டத்தை சில வன்முறையாளர்கள் திசைதிருப்புவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

