வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டின் கலாசாரம், உணவு மட்டுமின்றி அன்றாட வாழ்க்கையையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில், ரஷ்யாவில் பயணம் செய்த இந்திய பெண் ஒருவர் அங்குள்ள இரண்டடுக்கு ரயிலின் அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
ரயிலுக்குள் இருக்கும் வசதிகளை அவர் தனது வீடியோவில் விரிவாக காட்டியுள்ளார். முதலில் கீழ்தளத்தில் உள்ள பகுதிகளை சுற்றி காண்பித்த அவர், பின்னர் படிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்திற்கு சென்று அங்குள்ள நீண்ட நடைபாதை மற்றும் பயணிகளுக்கான தனித்தனி அறைகளை காண்பித்தார். தொடர்ந்து, தான் அமர்ந்திருந்த இருக்கையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ரயிலில் பயணிகளின் வசதிக்காக குடிநீர், கெட்டில், மைக்ரோவேவ் மற்றும் உணவு, பானங்கள் வழங்கும் வெண்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். தேவையான பொருட்களை வெண்டிங் இயந்திரத்தில் தேர்வு செய்த பின்னர், அங்குள்ள பணியாளர்களிடம் பணம் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பலர் ரஷ்ய ரயிலின் வசதிகளை பாராட்டியதுடன், இந்தியாவிலும் இதுபோன்ற வசதிகள் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் பார்க்குமாறு கூறியுள்ளனர்.

