தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமாவில் அறிமுகமாகப் போகிறார் என்ற தகவல் வெளியானபோது அவர் நடிகராகத்தான் களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்தனர். விஜயின் மகன் என்பதால் முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக நடிப்பைத் தேர்வு செய்யாமல் இயக்குநராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார் ஜேசன் சஞ்சய். அவரது முதல் படமான சிக்மா திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்தது. பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவுடன் உருவான இப்படத்தின் மூலம் இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிக்மா திரைப்படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பையும் வெற்றியையும் பெறவில்லை. இதனால் ஜேசன் சஞ்சயின் அடுத்தகட்ட சினிமா பயணம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தற்போது அவர் இயக்குநரிலிருந்து நடிகராக மாற திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் அடுத்து ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை நடிகர் விக்ராந்தின் சகோதரரும் ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான சஞ்சீவ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சஞ்சீவ் ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படத்தில் அசோசியேட் இயக்குநராகவும் அவர் பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த சினிமா புரிதல் புதிய படத்திலும் தொடரவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜேசன் சஞ்சயின் முதல் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனமே இந்தப் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ.35 கோடி பட்ஜெட்டில் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் மகன் நடிகராக அறிமுகமாகிறார் என்றால் முன்னணி இயக்குநர்கள் பலரிடமிருந்து வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கும் நிலையில், தனது முதல் ஹீரோ படத்திற்காக உறவினரான சஞ்சீவின் இயக்கத்தை ஜேசன் சஞ்சய் தேர்வு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

