தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள், விதி 7(3)-ன் படி அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வருகிற அக்டோபர் 31, 2026-க்குள் ‘IFHRMS களஞ்சியம்’ செயலியில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட கெடுவிற்குள் விவரங்களைப் பதிவேற்றத் தவறினால், விதியை மீறியதாகக் கருதப்பட்டு கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்து, நவம்பர் 2, 2026 அன்று அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற துறை ஊழியர்களுக்கு அமலில் உள்ள இந்த விதி, தற்போது பள்ளிக்கல்வித்துறைக்கும் தீவிரமாக்கப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

