தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதல்கள் மற்றும் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலை நோக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரை ‘கூட்டணியில் கூட சேர்க்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக இருந்த எடப்பாடி பழனிசாமி , சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பிற்கு பிறகு தனது போக்கில் மென்மை காட்டி வருகிறார். பா.ஜ.க மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே எடப்பாடி இறங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், ‘எடப்பாடியின் தலைமையிலான கூட்டணியில் இணையவே மாட்டோம்’ என்று ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் தரப்பு பிடிவாதம் காட்டுவது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இவர்கள் இருவரும் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்டுள்ளனர். அ.தி.மு.க ஒன்றாக இணையாத பட்சத்தில், தென்மாவட்டங்களில் வாக்குகள் சிதறி, அது தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக முடியும்.
குறிப்பாக, முக்குலத்தோர் சமூக வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்காவிட்டால், தென் தமிழகத்தில் அ.தி.மு.க-விற்கு பெரும் சரிவு ஏற்படும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் அச்சப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தனது தலைமையை தக்கவைப்பாரா அல்லது தென்மண்டல சவால்களைச் சமாளிக்க விட்டு கொடுப்பாரா என்பதுதான் 2026 தேர்தலின் முக்கிய கேள்வியாக உள்ளது.

