ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த கார் விபத்தில் பிரபல நடிகை மற்றும் மாடல் ஹர்ஷில் காலியா உயிரிழந்தார். பணி முடிந்து இரவு 11:30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சிப்ரா பாத் சாலையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வாகனம் முந்த முயன்றதா என சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ எனும் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்ற ஹர்ஷில், செய்தி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், பல ராஜஸ்தானி பாடல்களில் கதாநாயகியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மாடலிங் துறையில் சாதிக்க துடித்த ஒரு திறமையாளரின் மரணம் அந்த மாநில கலைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

