கனடாவில் அண்மைக் காலமாக Fertility Gap என்பது மிகப்பெரிய சமூக சவாலாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரக் கனடா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கனடியர்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் அதிகரித்துள்ள போதிலும், உண்மையான பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவான 1.25 ஆகக் குறைந்து அந்நாட்டை ‘மிகக் குறைந்த கருவுறுதல்’ கொண்ட நாடாக மாற்றியுள்ளது.
டொராண்டோவிலுள்ள மகப்பேறு நிபுணர்கள், தங்கள் சிகிச்சை மையங்களுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, இருபது வயதுகளில் உள்ளவர்கள் வருங்காலத் திட்டமிடலுக்காகத் தங்கள் கருவுறுதல் ஆரோக்கியத்தைச் சோதித்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். 2021-இல் 41 சதவீதமாக இருந்த குழந்தை பெற்றெடுக்கும் விருப்பம், 2024-இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த ஆர்வம் 64 சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கல்வி மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகப் பெண்கள் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. ஆண்களின் கருவுறுதல் பிரச்சனைகள் 50 சதவீதக் காரணிகளாக இருப்பதும், மகப்பேறு சிகிச்சைகள் குறித்த அதீத நம்பிக்கைகள் யதார்த்தத்திற்குப் புறம்பாக இருப்பதும் கவலையளிக்கிறது. இந்த ‘Fertility Gap’ தொடர்ந்தால், நாட்டின் மக்கள் தொகை முதிர்ச்சியடைந்து, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சுகாதார அமைப்புகளில் பெரும் அழுத்தத்தை உருவாக்கும் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

