நீண்ட தூர விமான பயணங்களை இனிமையாக்க ஏர் நியூசிலாந்து நிறுவனம் ‘ஸ்கைநெஸ்ட்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக எகனாமி வகுப்பில் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி, பயணிகள் படுத்து உறங்குவதற்காக ‘பங்க் பெட்’ போன்ற சிறிய படுக்கை அறைகளை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆக்லாந்து மற்றும் நியூயார்க் இடையிலான 17 மணிநேர நீண்ட தூர பயணங்களில் இந்த வசதி முதன்முதலாக அறிமுகமாகிறது.
இந்த ஸ்கைநெஸ்ட் பகுதியில் மொத்தம் ஆறு படுக்கைகள் இருக்கும். ஒரு பயணியால் நான்கு மணிநேரம் வரை இதில் படுத்து உறங்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மென்மையான மெத்தை, தலையணை, போர்வை, USB சார்ஜிங் வசதி மற்றும் தனிமைக்காக திரைச்சீலைகள் உள்ளன. நான்கு மணிநேர உறக்கம் முடிந்தவுடன் தானாகவே விளக்குகள் ஒளிர்வது போலவும், இல்லையெனில் ஊழியர்கள் வந்து எழுப்பும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு மே 18 முதல் தொடங்குகிறது. எகனாமி வகுப்பு டிக்கெட் விலையுடன் கூடுதலாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,223 செலுத்தினால் இந்த படுக்கை வசதியை பெறலாம். மொத்தமாக ஒரு பயணத்திற்கு சுமார் ரூ.1.30 லட்சம் வரை செலவாகும்.
நீண்ட தூர பயணங்களில் ஏற்படும் உடல் சோர்வை தவிர்க்க விரும்பும் எகனாமி வகுப்பு பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

