நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த பல வருடங்களாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் குறித்து அவர் எந்த விமர்சனமும் தெரிவித்தது இல்லை. இந்நிலையில்தான், திடீரென தமிழக அரசியல் பற்றி பேச துவங்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரகாஷ்ராஜ் ‘தற்போது மூன்று மாடல்கள் இருக்கிறது.. ஒன்று திராவிட மாடல், இரண்டாவது அடிமை மாடல், மூன்றாவது சினிமா மாடல்.
திராவிட மாடல் கல்வியை கொடுத்தது.. பல முக்கிய திட்டங்களுக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. அதோடு தமிழ், இனம், மொழி, மானம் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறது ..ஆனால் அடிமை மாடல் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மோடியிடம் கொடுத்து விட்டது.
சினிமா மாடல் (விஜய்) ஒன்றும் இருக்கிறது.. சினிமாவில் மருத்துவராகலாம்.. இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். ஆனால் நிஜத்தில் ஆக முடியுமா?.. என்னுடைய அளவுக்கு கூட விஜய் அரசியல் பேசுவதில்லை.. தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் விஜய் வந்து நின்னாரா?.. நடிகர்களை பார்த்தால் விசில் அடிக்கலாம்.. ஆனால் நாட்டை கொடுக்க முடியாது’ என்று அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த செய்தியை பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் ‘ரஜினியும் கமலும் தனிக்கட்சி துவங்கி தமிழ்நாட்டை ஆள கிளம்பிய போது இதை சொன்னீர்களா?.. நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

