ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி, லக்னோ கேப்டன் ரிஷப் பண்டிற்கு ஒரு மறக்க முடியாத கசப்பான இரவாக அமைந்தது.
இந்த போட்டியில் பண்ட் எடுத்த சில முடிவுகள் சூர்யாவின் ‘கஜினி’ பட கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவது போல் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான எம். சித்தார்த்தை சரியாக பயன்படுத்தாதது லக்னோவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பவர் பிளே ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்கள் அதிரடியாக விளையாடிய போது, பண்ட் சுழற்பந்து வீச்சை அறிமுகப்படுத்த தயங்கினார். அனுபவம் குறைந்த ஆயுஷ் பதோனி மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோருக்கு ஓவர்களை வழங்கிய பண்ட், சித்தார்த்தை ஓரம் கட்டினார்.
மார்க்ரம் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் உட்பட 32 ரன்கள் விளாசப்பட்டது. அதன் பிறகு பந்துவீச வந்த சித்தார்த், 3 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை முழுமையாக பயன்படுத்தாதது குறித்து அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பந்துவீச்சு மட்டுமின்றி, டிஆர்எஸ் முடிவிலும் பண்ட் சொதப்பினார். மோஷின் கான் வீசிய பந்தில் கூப்பர் கானலி எல்பிடபிள்யூ ஆன போது, பந்து ஸ்டம்பைத் தாக்காது என நினைத்து பண்ட் ரிவியூ எடுக்கவில்லை. ஆனால் ரீப்ளேயில் அது ‘அவுட்’ என தெரிந்த போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தவறால் உயிர் பிழைத்த கானலி 80 ரன்கள் குவித்து லக்னோவின் வெற்றியை பறித்தார். இந்த அடுத்தடுத்த தவறுகளால் லக்னோ அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது.

