பிராம்ப்டன் மாநகரில் இழுவை வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தீவைப்புச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2:50 மணியளவில், ஸ்டீல்ஸ் அவென்யூ மேற்கு மற்றும் மேவிஸ் சாலைக்கு அருகிலுள்ள 216 கிங்நாட் டிரைவ் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இழுவை வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பீல் பிராந்திய காவல்துறை இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட தீவைப்பு என வகைப்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் அஸ்காட் அவென்யூ பகுதியில் மற்றொரு இழுவை வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வீட்டிற்குள் ஆட்கள் இருந்தபோதிலும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்தத் தொடர் சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

