மும்பையில் நடைபெறவுள்ள டி20 மும்பை லீக் தொடருக்கான ஏலத்தில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஏஆர்சிஎஸ் அந்தேரி அணி, அர்ஜுனை 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அவருடைய அடிப்படை விலையான 2 லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாகும்.
2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட அர்ஜுன், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறாத நிலையில், இந்த ஏலம் அவருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில காலங்களாக கோவா மாநில அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், மும்பை லீக் தொடரில் பங்கேற்க பிசிசிஐ சிறப்பு அனுமதி அளித்துள்ளது. பிசிசிஐ விதிகளின்படி, ஒரு வீரர் 12 மாத காலத்திற்குள் ஒரு மாநில டி20 லீக் தொடரில் மட்டுமே பங்கேற்க முடியும்.
அர்ஜுன் கடந்த ஓராண்டில் வேறு எந்த மாநில லீக் போட்டிகளிலும் விளையாடாததால், அவர் இந்த மும்பை லீக்கில் விளையாடத் தகுதி பெற்றார். தனது ஐபிஎல் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்த குறுகிய கால தொடரின் மூலம் அவர் ஈட்டவுள்ளார்.
ஆல்-ரவுண்டராகத் திகழும் அர்ஜுன், இந்த தொடரில் தனது திறமையை நிரூபிப்பதன் மூலம் ஐபிஎல் போன்ற பெரிய மேடைகளுக்கான வாய்ப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

