அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார், திருமண மற்றும் டேட்டிங் செயலிகளில் போலி போலீஸ் அதிகாரி போல நடித்து 21 பெண்களை ஏமாற்றிய ஹிமான்ஷு என்ற ராக்கி பாஞ்சால் என்ற நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குஜராத் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுவது போல ஷாதி.காம், ஜீவன்சாதி மற்றும் பம்பிள் போன்ற செயலிகளில் இவர் போலி சுயவிவரங்களை உருவாக்கியுள்ளார்.
பெண்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலீஸ் உடையில் இருக்கும் தனது போலி புகைப்படங்கள், போலியான அரசு அடையாள அட்டைகள் மற்றும் பணி நியமன கடிதங்களை இவர் தயாரித்துள்ளார்.
தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், வருமான வரித்துறை சோதனையால் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் நாடகமாடி, சட்ட போராட்ட செலவுகளுக்காக பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.
குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த பெண்களை இவர் குறிவைத்துள்ளார். ஏற்கனவே மும்பையில் இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று பதிவாகி ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

