தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. ஆனால் கூட்டணியில் மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரஸுக்கு எந்த பங்கையும் திமுக கொடுக்கவில்லை. ஆனால் தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டது. ஒருபக்கம் திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் திமுக தலைவர்களும், திமுக ஆதரவாளர்களும் காங்கிரஸை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அண்ணா அறிவாலத்தில் நடந்த இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு திமுகதான் காரணம்.. பதவிக்காக நம்மிடம் சொல்லாமல் ஓடி விட்டார்கள்.. இனி எந்த காலத்திலும் காங்கிரஸை நாம் அருகில் சேர்க்கக்கூடாது’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ‘உதயநிதி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுகவின் வன்மம் வெளிப்பட்டு விட்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழகத்தில் பாஜக உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் எந்த தியாகத்தையும் செய்வோம்.. திமுகவினரை உற்சாகப்படுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி நடக்காது என ஸ்டாலின் பேசி வருகிறார்.. தோல்வி அடைந்ததும் திமுக பேசும் பேச்சு இதுதான்.. நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார்.. தவெக ஆட்சி தொடரும்’ என அவர் கூறியிருக்கிறார்.

