மதிய மற்றும் மாலை நேரங்களில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக பஜ்ஜி. வடை, போண்டா போன்ற திண்பண்டங்கள் இருக்கிறது. டீ கடைக்கு செல்லும் பலரும் இது போன்ற திண்பண்டங்களை ருசித்து சாப்பிடுகிறார்கள். அப்போது செய்தித்தாள்களை கிழித்து அதில் வைத்துதான் இந்த பண்டங்களை விற்பனை செய்கிறார்கள். பார்சலும் செய்து கொடுக்கிறார்கள்.
ஆனால் செய்தித்தாள்களில் வைத்து கொடுக்கப்படும் தின்பண்டங்களால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என சுகாதாரத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. மேலும் செய்தித்தாள்களில் வைத்து தின்பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் அதை பின்பற்றுவது இல்லை..
இந்நிலையில்தான், இந்தியா முழுவதும் தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு செய்திதாள்களை பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சி மையில் உடலுக்கு தீங்கு விளைக்கும் பல்வேறு நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற உலோகங்கள் இருக்கின்றன. பொரித்த உணவுகளை பேப்பரில் வைத்து சாப்பிடும் போது உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டீக்கடையில் வைத்து கொடுக்கப்படும் செய்தித்தாள்களில் உள்ள தூசி, அழுக்கு உணவை அசுத்தப்படுத்தி உடலுக்கு தீங்கை விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
செய்தித்தாள்கள் உள்ள மையில் உள்ள வேதிப்பொருள்களால் செரிமான பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதையடுத்து, பஜ்ஜி, வடை போன்ற திண்பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து கொடுக்கக்கூடாது எனவும் பார்சலுக்கும் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பேப்பருக்கு பதிலாக வாழை இலை, பட்டர் பேப்பர், எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

