டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து பல நாடுகளுக்கும் கிலியை ஏற்படுத்தினார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் பணியில் இறங்கினார்.
அதேபோல், பல அமெரிக்க நிறுவனங்கள் H1B விசாவை பயன்படுத்தி பல நாடுகளில் இருந்தும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது.; அதில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆனால், விசா மற்றும் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கிய டொனால்ட் கடந்த வருடம் H1B விசாவுக்கான கட்டணத்தை 2 லட்சத்திலிருந்து 88 லட்சமாக உயர்த்தினார்.
இது அமெரிக்காவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு அமெரிக்காவில் பணிபுரிய முயற்சி செய்து கொண்டிருந்த இந்தியர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து H1B விசாவுக்கு டிரம்ப் விதித்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி அமெரிக்காவில் உள்ள 20 மாகாணங்களின் அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிய H1B விசா பெற டிரம்ப் விதித்த 88 லட்சம் ரூபாய் கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இந்த நடவடிக்கையை அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது டொனால்ட் டிரம்ப் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

