உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் 2027 சட்டமன்ற தேர்தலுக்காக, அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அண்மைய தேர்தல்களில் பின்னடைவை சந்தித்த எதிர்க்கட்சிகள், தங்களை மீண்டும் பலப்படுத்த முயலும் சூழலில் இந்த முரண்பாடு வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் இதுபற்றி கூறும்போது, ஓவைசியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தலைமைதான் முடிவெடுக்கும் என்றும், ஆனால் “அரசியலில் மதவாதத்துடன் எந்த சமரசமும் செய்ய முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிஜேபியை வீழ்த்த நினைப்பவர்கள் ராகுல் காந்தியை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், பிஜேபியை பலவீனப்படுத்தும் எந்த ஒரு சக்தியையும் தாராளமாக வரவேற்பதாக கூறி ஓவைசிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதற்கிடையே, தங்களை மரியாதையுடனும் சம அந்தஸ்துடனும் நடத்தினால், உ.பி-யில் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஓவைசி அறிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில், பழைய தேர்தல் உத்திகள் இனி வேலை செய்யாது என்றும், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

