ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதன்மை உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்த போதே ஒரு குழுவை சேர்ந்த மாணவர்கள் அரங்கிலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வளாகங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களின் அரசு மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த கூட்டணிகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ‘Students for Justice in Palestine’ மற்றும் ‘No Tech for Apartheid’ ஆகிய ஆர்வலர் அமைப்புகள் இந்த வெளிநடப்பை ஒருங்கிணைத்தன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் கூகுள் நிறுவனம் வைத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தத் போராட்டம் நடத்தப்பட்டது.
சுந்தர் பிச்சை தனது உரையில் ஏஐ தொழில்நுட்பம் அல்லது தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்து பேசுவதை தவிர்த்துவிட்டு, பட்டதாரிகளுக்கான தனிப்பட்ட அறிவுரைகள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் குறித்த ஆலோசனைகளை மட்டுமே வழங்கினார். கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வும், ஸ்டான்போர்ட் முன்னாள் மாணவருமான சுந்தர் பிச்சை, தற்போதைய தலைமுறை ஏஐ-இன் தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போதைய சூழலில் ஏஐ-ஆல் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் புதிய பட்டதாரிகளிடையே நிலவி வரும் நிலையில், நிறுவனங்கள் தங்களது ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஏஐ-ஐ ஒரு எளிய காரணமாகக் கூறுவது சோம்பேறித்தனமான வாதம் என்று என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் விமர்சித்துள்ளார்.

