பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ள 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மால்வா கால்வாய்’ திட்டம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பஞ்சாபில் திட்டமிடப்பட்ட முதல் பெரிய கால்வாய் திட்டம் இதுவென அரசு கூறினாலும், ஹரியானா இதற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சுமார் 150 கி.மீ நீளம் கொண்ட இந்த கால்வாய், வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு மால்வா பகுதிக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. சட்லெஜ் நதியில் ஹரிகே நீர்மின் நிலையத்திலிருந்து தொடங்கும் இத்திட்டம், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், பஞ்சாபிடம் உபரி நீர் இல்லை என்று கூறி சட்லெஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை தடுத்து வரும் நிலையில், புதிய கால்வாய்க்கு மட்டும் எங்கிருந்து நீரை பெறுவீர்கள் என்று ஹரியானா கேள்வி எழுப்பியுள்ளது.
இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால், மத்திய அரசு தலையிட்டுள்ளது. வட மண்டல கவுன்சில் கூட்டத்தில், அடுத்த ஒரு மாதத்திற்குள் இரு மாநிலங்களும் சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பஞ்சாபிலேயே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நீர் தேக்கம் குறித்த அச்சங்களால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீர் மேலாண்மை மற்றும் அரசியல் ரீதியான இந்த இழுபறி, இரு மாநில உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

