மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் சுவாசிகாவும் ஒருவர். லப்பர் பந்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுவாசிகா பிரபலமானார். சசி இயக்கத்தில் இவர் நடித்து உருவான நூறு சாமி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. நூறு சாமி படத்தின் கதை ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. திருமணமான ஒரு பெண் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை பார்த்த பல பெண்கள் தியேட்டர்களிலேயே கண்ணீர் விட்டு அழுகிறார்கள்..
இந்நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சுவாசிகா ‘தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. அதை தவிர நான் வேறெதுவும் சொல்ல தெரியவில்லை.. எனது நன்றியை வார்த்தைகளால் எப்படி சொல்வது என்றும் தெரியவில்லை. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நான் நடித்து அந்த படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெரும் என்று நான் ஒரு நாளும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை.
ஆனால் இன்று அது நடந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் இந்த மாபெரும் ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. இனி வரும் காலங்களில் இன்னும் பொறுப்புடன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து உங்களை ஏமாற்றாதபடி கடினமாக உழைப்பேன்’ ஆனந்த கண்ணீரோடு கூறியிருக்கிறார்.

