கனடாவில் வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியுரிமை பெற்றவர்களுக்குக் குடியுரிமைச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு அரசு அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, ‘Bill C-3’ எனப்படும் வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அவ்வாறு சான்றிதழ் பெற்ற பலருக்குக் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில், வழங்கப்பட்ட ஆவணங்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளதால், சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்தத் திடீர் அறிவிப்பு குடியுரிமை பெற்றவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வார இறுதியில் சிலருக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புதிய கடிதத்தில், ஆவணங்கள் முழுமையாக மீளாய்வு செய்யப்பட்ட பிறகு அவர்களின் குடியுரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய நிர்வாகக் குழப்பம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்துப் புலம்பெயர்தல் துறை அமைச்சர் லீனா தியாப் அலுவலகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

