திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடித்ததால் தான் திமுகவுக்கு 59 இடங்களில் மாபெரும் வெற்றி கிடைத்தது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விசிகவின் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு மாறியதால் தான் திமுக தோல்வியுற்றது என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அவர் மறுத்தார். மாறாக, விசிகவின் வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு சென்றதால் தான் அக்கட்சி 59 இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு தனது பரிந்துரையின் பேரில் தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்று பரவும் வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை தான் தவெக என்று தான் சொன்னதை பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், திமுகவை ‘தீய சக்தி’ என்று விமர்சித்த விஜய்யைப் திமுக தலைவர் தனது வீட்டிற்கு வரவேற்று உபசரித்தது ஏன் என்று இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை” என்று திருமாவளவன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

