மாணிக்கம் தாகூர் என்ன ரவீந்திரநாத் தாகூரின் பேரனா?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “மாணிக்கம் தாகூர் திடீரென அரசியலில் மேலே வந்தவர். அவர் தன்னை ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என்று நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் வெறும் மாணிக்கம் தாகூர் தான்” என்று மிக காரசாரமாக விமர்சித்துள்ளார்.
மேலும், தங்களுக்கு தற்போதைய முதல் எதிரி தமிழக வெற்றிக் கழகம்தான் என்றும், காங்கிரஸ் கட்சியை பற்றி தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அவர் வெளிப்படையாக கூறினார். “திமுக காரர்களிடம் விளையாடினால் பேச்சு வேற மாதிரி இருக்கும்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கூடணியில் அங்கம் வகித்து வந்த நிலையில், தற்போது கூட்டணி பிரிந்துவிட்டதால் திமுகவின் மூத்த நிர்வாகியான ஆர்.எஸ். பாரதி இந்த அளவுக்குக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

