கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பிராம்ப்டன் மற்றும் மிசிசாகாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Project Jester என்று பெயரிடப்பட்ட இந்த புலனாய்வு நடவடிக்கை, GTA பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கும்பலை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது. மார்ச் 27 அன்று கியூபெக் நோக்கிச் சென்ற வாகனத்தை மறித்துச் சோதனையிட்டதில் அதிக அளவிலான போதைப்பொருட்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மே 7 அன்று பிராம்ப்டனில் மற்றொரு வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து, போதைப்பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு 273 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 20 கிலோ கோகைன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மிசிசாகாவைச் சேர்ந்த 36 வயதான தாலெப் சலே மீது கோகைன் கடத்தல் குற்றச்சாட்டும், பிராம்ப்டனைச் சேர்ந்த 33 வயதான சுக்வீர் பிரிங் மீது மெத்தாம்பேட்டமைன் கடத்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் மில்டனில் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, சமூகத்தைப் பாதுகாப்பதில் காவல்துறை உறுதியாக இருப்பதாகத் துணைத் தலைவர் ஜெஃப் ஹில் குறிப்பிட்டுள்ளார்.

