அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு திரும்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய விதிகளின்படி, தற்போதைய ‘நிலை கால அளவு’ முறையானது மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் எப்-1 மற்றும் ஜே-1 விசா வைத்துள்ள மாணவர்கள் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய விதி செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
படிப்பை முடிக்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் இளங்கலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இந்த வரம்பு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்திய மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காலம் தாழ்த்தப்பட்டால் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்றும், அமெரிக்காவின் போட்டித்தன்மை குறையும் என்றும் பவுண்டேஷன் ஃபார் இந்தியா அண்ட் இந்தியன் டயஸ்போரா ஸ்டடீஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே மாணவர்கள் கல்வி இடைவேளையின் முடிவில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கல்வி நிலையங்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

