கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான டிலான் திஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனங்கள் வாயிலாக சிறுவர் பாலியல் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணினிகள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவர் மீது ஆபாசப் பொருட்களை வைத்திருந்தது மற்றும் அவற்றை அணுகியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எனினும், மருத்துவப் பணியின் போது இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராகவே கருதப்படுவார்.

