ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது எப்போது போரை துவங்கியதோ அப்போதே ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூடிவிட்டது. இதன் காரணமாக ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடம் மூடப்பட்டது.
இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இது அமெரிக்காவுக்கு பிரச்சனையை கொடுக்கவே ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா கூறியது.
ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனாலும் ஹார்மூஸ் வழியாக வந்த சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கோபமடைந்த அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
தற்போது இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்நிலையில்தான், எங்களின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க விட்டால் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடையும் வரை அதாவது 2029ம் ஆண்டு வரை ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
போர் இழப்பீடாக 28.62 லட்சம் கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும், மேற்காசிய பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், கடற்படை முற்றுகையை முடிவு கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகளை ஈரான் விதித்திருக்கிறது.

