கனடாவின் மார்க்கம் நகரைச் சேர்ந்த தவமணிதேவி ஜே. என்ற மூதாட்டி, அல்ட்ரா ஸ்கிராட்ச் லாட்டரி சீட்டு விளையாட்டின் மூலம் ஒரு மில்லியன் டாலர் உயரிய பரிசை வென்றுள்ளார். இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட இவர், லாட்டரி சீட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர். மார்க்கம் நைத் லைனில் உள்ள பெட்ரோ-கனடா எரிபொருள் நிலையத்தில் இந்த வெற்றிச் சீட்டை அவர் வாங்கியுள்ளார். அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து சீட்டைச் சுரண்டியபோது அவருக்கு இந்தப் பரிசு விழுந்தது உறுதியானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பத்தில் அத்தனை பூஜ்ஜியங்களைக் கண்டு என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனடியாக எனது கணவரை அழைத்து விபரத்தைக் கூறினேன் என்றார். வெற்றிச் செய்தியை அறிந்த பிறகு வீட்டிற்கு நடந்த 20 நிமிட பயணம், இரண்டு மணிநேரப் பயணம் போலத் தோன்றியதாக அவர் திகைப்புடன் குறிப்பிட்டார். வீட்டிற்குச் சென்றதும் தனது மகனிடம் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார். தவமணிதேவியின் இந்த வெற்றி அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வெற்றிப் பணத்தைக் கொண்டு தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு முதன்மையாக உதவப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது அன்புக்குரியவர்களுடன் ஜமைக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் OLG பரிசு மையத்தில் செக்கைப் பெற்றுக்கொண்டபோது அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

