தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. அவரது கைவசம் தற்போது ஜெயிலர் 2 மற்றும் தர்மன் ஆகிய திரைப்படங்கள் உள்ள நிலையில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஜெயிலர் 2 படத்தின் மீது திரும்பியுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், யோகி பாபு, நமோ நாராயணா மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி முதல் பாகத்தை போலவே சிறப்பு தோற்றங்களில் சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படத்தை அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
இந்த நிலையில் ஜெயிலர் 2 ட்ரெய்லர் நேற்று மாலை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது. ரஜினியின் மாஸ் காட்சிகள் மற்றும் படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங் ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான குறுகிய நேரத்திலேயே ட்ரெய்லர் மிகப்பெரிய பார்வைகளை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ஜெயிலர் 2 ட்ரெய்லர் கடந்துள்ளதாக அந்நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
முதல் ஜெயிலர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் என்பதாலேயே ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது ட்ரெய்லருக்கும் கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

