தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் அளித்துள்ள பதில் வைரல் ஆகி வருகிறது.
மலையாளத்தில் வெளியான மனசினக்கரே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நயன்தாராவுக்கு அடுத்ததாக ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நயன்தாரா, படிப்படியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹீரோக்களை மையப்படுத்தாத கதைகளிலும் தொடர்ந்து நடித்து வெற்றிகளை கொடுத்ததால் ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர்.
நயன்தாராவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்த படங்களில் ஒன்று நானும் ரவுடிதான் . விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பணியாற்றியபோது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் காதலித்து வந்த இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள். திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நேரடியாக அரசியல் கட்சியை தொடங்கி இன்று முதல்வராகவும் உள்ளார். இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகர்களின் எதிர்கால அரசியல் வருகை குறித்தும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதேபோல் முன்னணி நடிகையான நயன்தாராவும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நயன்தாராவின் அரசியல் வருகை குறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நயன்தாரா குழந்தையையும், குடும்பத்தையும் கவனிப்பதிலும், வீட்டைப் பார்த்துக் கொள்வதிலுமே தனது முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், நிறைவுமே எங்களுக்கு இப்போது போதுமானதாக இருக்கிறது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதைக்கு நயன்தாராவுக்கு அரசியலில் களமிறங்கும் எண்ணம் இல்லை என்பதை விக்னேஷ் சிவன் தனது பதிலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

