வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமடைந்து கோமாவில் இருப்பதாகவும், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்ததாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவின. அவர் அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒருவேளை அவர் இறந்துவிட்டால் அவரது சகோதரி கிம் யோ ஜோங் அல்லது அவரது மகள் அதிகாரப் போட்டிக்கு வருவார்கள் என்றும் ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. ஆனால், இந்தத் தகவல்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இருக்கவில்லை.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்ட புகைப்படங்களை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தன் மனைவி மற்றும் மகளுடன் கண்காட்சியைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் அவர் உரையாடும் படங்கள் வெளியாகியுள்ளன. வட கொரியா வெளி உலகத்திற்கு தகவல்களை தெரிவிக்காத இரகசிய நாடாக விளங்குவதால், அவர் சில காலம் பொதுவெளியில் வராவிட்டால் இதுபோன்ற வதந்திகள் எழுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம் குறித்த வதந்திகள் மற்றும் அதன் பின்னணி குறித்து உலக நாடுகளும் உளவு நிறுவனங்களும் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

