பெங்களூருவில் உள்ள ஐடி மற்றும் தனியார் நிறுவனங்கள், கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்களை திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவும், குறைந்த சம்பளத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும் ஒரு இளம் பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் குறித்துக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகாவில் கன்னடர்களே நாட்டின் இறையாண்மை கொண்டவர்கள். எந்தவொரு தனியார் நிறுவனமாவது திட்டமிட்டு கன்னடர்களை புறக்கணிப்பது தெரியவந்தால், அம்மாநில அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்” என கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், கன்னடர்களின் உரிமை, கண்ணியம் மற்றும் வேலைவாய்ப்புகளை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் காங்கிரஸ் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், வெறும் எச்சரிக்கைகளோடு நிற்காமல் தெளிவான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே 2024-இல் கொண்டுவரப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கான இடஒதுக்கீடு சட்ட வரைவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் மீண்டும் அம்மாநிலத்தில் மொழி சார்ந்த வேலைவாய்ப்பு விவாதத்தைப் பூதாகரமாக்கியுள்ளது.

