பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இருப்பினும், 2019-ல் வெளியான ‘சித்திரம் பேசுதடி 2’ படத்திற்குப் பிறகு அவர் கடந்த பல ஆண்டுகளாகத் தென்னிந்தியச் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது தான் ஏன் தென்னிந்திய திரையுலகை விட்டு விலகியிருந்தேன் என்பது குறித்த காரணங்களை அவர் ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களில் உள்ளூர் பெண் கலைஞர்களை விடவும், மும்பையிலிருந்து சிவப்பான வடஇந்திய நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைக்கும் கலாச்சாரமே தனது இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் திறமையும் அழகும் மொழி புலமையும் கொண்ட எத்தனையோ சிறந்த பெண் கலைஞர்கள் இருக்கும்போது, மொழி தெரியாத வடஇந்திய நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பை தான் ஆதரிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
மேலும், மொழி தெரியாமல் நடிப்பது ஒரு நடிகையாக கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் நிலவும் ஆண் ஆதிக்க சூழல் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான கேலிகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளையில், தென்னிந்திய படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் காட்டப்பட்ட அன்பையும் குடும்ப பாசத்தையும் அவர் நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

