மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, ஒரு திரைப்பட நிகழ்வாக தொடங்கி அரசியல் மாநாடாக நிறைவுற்றது.
கருப்பு நிற உடையில் கம்பீரமாக தோன்றிய விஜய், தனது 33 ஆண்டுகால திரை பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். “நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டவே ஆசைப்பட்டேன், ஆனால் ரசிகர்கள் எனக்குப் பிரம்மாண்டமான கோட்டையை எழுப்பி கொடுத்துள்ளார்கள்” என்று கூறித் தனது வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பித்தார்.
தனது அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “நான் சினிமாவில் நடிக்க வந்த முதல் நாளிலிருந்து பல அவமானங்களை சந்தித்துள்ளேன். எனக்காக 33 ஆண்டுகள் உழைத்த ரசிகர்களுக்காகவே இப்போது சினிமாவை துறக்கிறேன். எனக்கு ஒன்று என்றால் தியேட்டர் வாசலில் நிற்கும் என் மக்களுக்காக, அவர்களுக்கு ஒன்று என்றால் இனி நான் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பேன்” என உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார். மேலும், ஒரு மனிதன் வலிமையானவனாக மாற வலுவான எதிரி அவசியம் என்றும், தான் எப்போதும் மக்களுடன்தான் இருப்பதாகவும் உறுதிபடக் கூறினார்.
அனிருத்தை ‘மியூசிகல் டிபார்ட்மென்ட் ஸ்டோர்’ என்று வர்ணித்த விஜய், இயக்குனர் எச். வினோத்தின் சமூக பொறுப்பைப் பாராட்டினார். இறுதியில், “2026-ல் வரலாறு மீண்டும் திரும்பும்” என அவர் முழங்கியது, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான நேரடி போர் முழக்கமாகவே பார்க்கப்படுகிறது.

