ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் விவாத பொருளாகியுள்ளது.
பிரிட்டனின் விலங்கு நல அமைப்பான RSPCA சமீபத்தில் நடத்திய மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது போல தோன்றுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இது உண்மையான புகைப்படம் தான் என்பதை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், சுமார் 250 நாய்கள் ஒரே இடத்தில் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டன. குடும்ப சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் காரணமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இது போன்ற சம்பவங்கள் 2021-ஆம் ஆண்டிலிருந்து 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக RSPCA கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் ஒரே முகவரியில் இருக்கும் சுமார் 4,200 வழக்குகளை இந்த அமைப்பு கையாண்டுள்ளது. மனநல பாதிப்புகள், நிதி நெருக்கடி மற்றும் அளவுக்கு அதிகமான இனப்பெருக்கம் போன்றவை இத்தகைய நிலைக்கு காரணமாகின்றன.
மீட்கப்பட்ட விலங்குகளுக்கு தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் இவற்றை தத்தெடுக்க முன்வர வேண்டும் என RSPCA கோரிக்கை விடுத்துள்ளது.

