மேற்கு வங்க சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால வாக்களிக்கும் உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுமார் 16 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யான் பானர்ஜி வாதிட்டார்.
ஆனால், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ள நிலையில் இத்தகைய கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்று கூறி அதனை நிராகரித்தது.
வங்கதேச எல்லை மாவட்டங்களில் சுமார் 27 லட்சம் புகார்களை விசாரிக்க 19 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலை இறுதி செய்துவிட்டதால், நீதிமன்றத்தின் சிறப்பு உத்தரவு இன்றி புதிய பெயர்களைச் சேர்க்க முடியாது. பாதிக்கப்பட்ட 13 தனிநபர்கள் தாக்கல் செய்த மனுவை “முதிர்ச்சியற்றது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் முதலில் தங்களுக்குரிய தீர்ப்பாயங்களை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

