மனிதர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாகவே இருக்கிறது. குறிப்பாக ஆங்கிலம் பேசும் வெளிநாடுகளில்தான் இந்த பழக்கம் முதன் முதலில் வந்ததாக சொல்லப்பட்டது. அதன் பின் புகைபிடிக்கும் பழக்கம் உலகமெங்கும் உள்ள மக்களிடம் பரவியது. இந்தியாவிலும் பல கோடி பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.
புகை பிடிப்பதால் புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம், நாள் பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான பல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர் எச்சரித்தாலும் புகை பிடிப்பவர்கள் அதை நிறுத்துவதில்லை.
மதுப்பழக்கத்திற்கு எப்படி பலரும் அடிமை ஆகிறார்களோ அப்படி புகைப்பழக்கத்திற்கும் நிறைய பேர் அடிமையாகிவிடுகிறார்கள். புகைப்பழகத்திலிருந்து மீள்வது பலருக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இன்னும் செல்லப்போனால் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் கூட புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள். இநிந்லையில்தான், பிரிட்டனில் இனிமேல் சிகரெட் கிடைக்காது என்கிற நிலை உருவாகியிருக்கிறது.. இதற்காக ஒரு தனி சட்டத்தை அந்த நாடு உருவாக்கியிருக்கிறது.
அதாவது பிரிட்டனில் 2008ம் வருடத்திற்கு பின் அதாவது ஜனவரி 1, 2009 முதல் பிறந்த யாருக்கும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 17 வயது மற்றும் அதற்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் சட்டபூர்வமாக சிகரெட் வாங்க முடியாத வகையில் புதிய வரலாற்று சிறப்புமிக்க சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

