நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக 993 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 3,237 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இந்த விலை மாற்றத்திற்கு காரணம். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே 70 சதவீத சிலிண்டர் வினியோக தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த விலையேற்றம் ஹோட்டல் தொழிலை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும் என ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் தெரிவித்துள்ளது.
டீ, காபி மற்றும் உணவு வகைகளின் விலை 5 முதல் 50 ரூபாய் வரை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், தற்போதுள்ள விலை உயர்வு நடுத்தர மக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
இந்த நெருக்கடியால் பல ஹோட்டல்கள் பணி நேரத்தை குறைத்துள்ளன. சிறு உணவகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் குறைக்க வேண்டும் என இத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், ஏராளமானோர் வேலை இழக்கும் சூழல் உருவாவதோடு, பல ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது.

