தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஜெய், தான் இஸ்லாமிய மதத்தை தழுவியதற்கான காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தான் இஸ்லாத்தை பின்பற்றி வருவதாகவும், இது தனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளால் எடுத்த முடிவு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜெய், “நான் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறேன், இயேசுவின் மாலை அணிந்து விரதம் இருந்திருக்கிறேன். எல்லா கடவுள்களையும் நான் நம்பினேன். ஆனால், ஒரு கட்டத்தில் சில கோயில்களில் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் என் மனதை பெரிதும் பாதித்தன,” என்று கூறியுள்ளார்.
இதற்கு மாறாக, தான் முதன்முதலில் மசூதிக்கு சென்றபோது கிடைத்த அனுபவம் மிகவும் அமைதியானதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். “மசூதிக்குள் நான் ஒரு நடிகர் என்பதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அங்கு அனைவரும் சமம். அங்கு பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லை, கடவுள் மட்டுமே உயர்ந்தவர். எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக பிரார்த்தனை செய்ய முடிந்தது, அது எனக்கு ஒரு யோகா போன்ற அமைதியைத் தந்தது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது பெயரை ‘அஜீஸ் ஜெய்’ என்று மாற்றும் எண்ணம் இருப்பதாகவும், எனினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக மாற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

