ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக சந்தித்த உட்கட்சிப் பூசல்களும் எடப்பாடி பழனிச்சாமியின் சில தன்னிச்சையான முடிவுகளும் அக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் வெளியேற்றமும், கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் சறுக்கல்களும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பல தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்கான கட்சியாக அது சுருங்கி வருவதாக எழும் விமர்சனங்களும் தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாடுகளை தனது பாணியில் முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் தங்களின் மாற்று அரசியல் தளமாகப் பார்க்த் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, தென் மாவட்டங்களை சேர்ந்த பல இரண்டாம் கட்ட தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் தவெகவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் வாக்கு வங்கியும் உட்கட்டமைப்பும் தவெகவை நோக்கி நகர்வதால், தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழலில் மற்றொரு பலமான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் சுயநல அரசியல் போக்கினால் அதிமுக அழிகிறது என்ற வேதனையில், தங்களின் எதிர்காலமாக தவெகவை தொண்டர்கள் தேர்ந்தெடுத்து வருவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

