2026 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் பிரமிக்க வைத்தார். அவர் வெறும் 29 பந்துகளில் 97 ரன்களை விளாசி, ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நிலைகுலைய செய்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது.
தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சையும், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் அணியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆட்டம், வைபவ் சூர்யவன்ஷியின் அபார பேட்டிங்கால் ஒருதலைப்பட்சமாக மாறியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. ஐதராபாத் அணி இந்த தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் அணி அடுத்தகட்டமாக குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இறுதி போட்டியில் பெங்களுருடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

