இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான மிக முக்கியமான சமிஞ்கையை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இதற்கான இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவிடம் உள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்களுக்கு மேல் குவித்து ‘ஆரஞ்சு தொப்பியை’ வென்று சாதனை படைத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் காட்டிய அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், வைபவ் இந்திய கிரிக்கெட்டின் புதிய அதிசய குழந்தை என்றும், வரவிருக்கும் நாட்களில் அவர் உலக கிரிக்கெட்டை புயலாக தாக்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் அடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தேர்வுக்குழு கூட்டத்தில், அவரது சிறப்பான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு தேர்வுக் குழுவினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றிருந்தாலும், இந்த சீசனின் மிகப்பெரிய பேசுபொருளாக வைபவ் சூர்யவன்ஷி மாறியுள்ளார்.

