இந்தியா

ஒரே இரவில் மூடப்பட்ட ஐடி நிறுவனம்: 500 ஊழியர்கள் நடுத்தெருவில்..

புனேவின் ஹிஞ்சேவாடி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் இயங்கி வந்த ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 500-க்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா முழுவதும் பிரம்மாண்டமான ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்களை இந்த நிறுவனம் பணியில் அமர்த்தியது. ஆரம்பத்தில் சம்பளம் முறையாக வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 2026 முதல் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமல் நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளது. சம்பளம் குறித்து கேட்ட ஊழியர்களிடம், நிதித்துறையில் கோப்புகள் தேங்கியுள்ளன , ஆடிட்டிங் நடக்கிறது எனப் பல காரணங்களைக் கூறி நிர்வாகம் ஏமாற்றி வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள், அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிர்வாகத் தரப்பைத் தொடர்பு கொள்ள முயன்றும் எவரும் கிடைக்கவில்லை.

இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் இருந்து லேப்டாப் வைப்புத்தொகை என்ற பெயரில் தலா ரூ. 15,000 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணையில் அந்த லேப்டாப்கள் நிறுவனத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதும், அவை வெளி சந்தையில் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்ட வைப்புத்தொகையைத் திருப்பித் தராமலே நிறுவனம் அலுவலகத்தைப் பூட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புனேவின் ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் சிஇஓ ஹர்ஷல் தாக்கரே என்பவரை நாசிக் நகரில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி மற்றும் பயிற்சிப் பிரிவுத் தலைவர்கள் மீதும் மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் இல்லை. வீட்டு வாடகை கட்ட முடியாமலும், லோன் இஎம்ஐ செலுத்த முடியாமலும் தவிக்கிறோம். கையில் இருந்த சேமிப்பு முழுவதையும் லேப்டாப் டெபாசிட்டாகக் கொடுத்துவிட்டு இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம் எனப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்