மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. இந்த கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளும் இருக்கின்றன.
இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தாலும் அதில் முக்கியம முகமாக திமுக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப்பின் திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததோடு அந்த கட்சியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுவிட்டது. எனவே தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இந்தியா கூட்டணியில் திமுகவுக்கு பதிலாக தவெகவை கொண்டுவரும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது..
இந்நிலையில்தான், டெல்லியில் வருகிற 8ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என திமுக அறிவித்திருக்கிறது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது.. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் துரோகம் இழைத்தது. காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தால் திமுக தொண்டர்கள் மிகுந்த மனக்காயம் அடைந்திருக்கிறார்கள். தொண்டர்கலின் உணர்வுக்கு மதிப்பளித்து கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.. அதேநேரம் நாட்டு நலனை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு என்றும் குரல் கொடுப்போம்’ என திமுக அறிவித்திருக்கிறது.

