பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போதைய முதலமைச்சரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாரிதாஸ் பேசியதிலோ அல்லது எழுதியதிலோ பிழைகள் மற்றும் சட்ட மீறல்கள் இருந்தால், அதற்காக தாராளமாக வழக்குப்பதிவு செய்யலாம்; ஆனால் இந்த விஷயத்தில் கைது நடவடிக்கை என்பது முற்றிலும் தேவையற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் தப்பி ஓடிவிடுவார், சாட்சிகளை கலைத்துவிடுவார் அல்லது தடயங்களை அழித்துவிடுவார் என்ற அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன என்பதை சவுக்கு சங்கர் நினைவூட்டியுள்ளார்.
அத்தகைய சட்ட விதிகளையெல்லாம் மதிக்காமல், அரசை தீவிரமாக விமர்சிக்கிறார் என்பதற்காக ஒருவரை அதிகாலையில் கைது செய்வது முறையல்ல என்றும், இப்படி செய்தால் உங்களுக்கும் முந்தைய திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முதலமைச்சரிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில், அவரை தவறான பாதையில் வழிநடத்தக்கூடிய பலர் தற்பொழுது சுற்றிலும் இருக்கிறார்கள் என்றும், எனவே முதலமைச்சர் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் எச்சரித்துள்ளார்.

