2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களை கூறி இந்தியாவுக்கு பயணம் செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐசிசி மற்றும் பிசிசிஐ பலமுறை உறுதியளித்தும் வங்கதேசம் பிடிவாதமாக விலகியதால், அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வங்கதேச டி20 கேப்டன் லிட்டன் தாஸ், தங்கள் நாட்டு வாரியத்தின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். “நாங்கள் பாகிஸ்தானிலேயே விளையாடியிருக்கும் போது, இந்தியாவில் விளையாடுவதில் என்ன பிரச்சனை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பயணத்தின் போது தங்களுக்கு அளிக்கப்பட்ட அச்சுறுத்தலான பாதுகாப்பு சூழலை ஒப்பிட்டுப் பேசிய அவர், “பாகிஸ்தானில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே துப்பாக்கிகளுடன் வீரர்கள் நின்று கொண்டிருப்பார்கள்; அதைவிட ஆபத்தானது என்ன இருக்க முடியும்? எங்களால் பாகிஸ்தானில் விளையாட முடிகிறது என்றால், ஏன் இந்தியாவில் விளையாட முடியாது?” என்று வெளிப்படையாக கேட்டுள்ளார்.
வீரர்களாகிய தங்களுக்கு உலகக் கோப்பையில் விளையாடவே விருப்பம் இருந்தது என்றும், ஆனால் வாரியத் தலைமை தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் லிட்டன் தாஸ் ஆதங்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் வங்கதேச வாரியம் ஆடிய அரசியல் நாடகத்தையும், பாகிஸ்தானின் ‘ஆபத்தான’ சூழலையும் லிட்டன் தாஸின் இந்த தடித்த வார்த்தைகள் தற்பொழுது உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளன.

