இந்திய திரையுலகில் பெரும் அலையை ஏற்படுத்திய ‘மிர்ஸாபூர்’ இணைய தொடர், தற்போது தியேட்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ‘மிர்ஸாபூர்: தி மூவி’ திரைப்படத்தின் அதிரடியான முதல் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓடிடி தளத்திலிருந்து வெள்ளித்திரைக்கு இந்த தொடர் மாறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த திரைப்படத்தின் டீசர் ஆக்ஷன், மர்மம், காதல் மற்றும் எமோஷன்கள் நிறைந்த ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்துள்ளது. 2018-ல் வெளியான முதல் சீசனின் காலவரிசையை ஒட்டியே இதன் கதையும் நகர்கிறது. இருப்பினும், பெரிய திரைக்காக ஒரு புதிய கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இணைய தொடரில் ஏற்கனவே இறந்ததாக காட்டப்பட்ட முன்னா பையா, ஸ்வீட்டி குப்தா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் இந்த திரைப்படத்தில் தோன்றுகின்றனர்.
பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோருடன் இணைந்து, ஜித்தேந்திர குமார், ரவி கிஷன் மற்றும் சோனல் சவுகான் போன்ற புதிய நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். குர்மீத் சிங் இயக்கத்தில், ரிதேஷ் சித்வானி மற்றும் ஃபர்ஹான் அக்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 4, அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

