கட்சி சேர’ மற்றும் ‘ஆசை கூட’ ஆகிய ஆல்பம் பாடல்கள் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபியங்கர். இவருடைய பாடல்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய ட்ரெண்டாகின. குறிப்பாக, அந்தப் பாடல்களின் வீடியோக்களில் சாய் அபியங்கரின் தோற்றமும், நடன அசைவுகளும் பலரைக் கவர்ந்ததால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது அட்லி, தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர் இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில், முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சாய் அபியங்கர் ஹீரோவாக அறிமுகமாகப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வேகமாகப் பரவின.
இந்த நிலையில், தான் ஹீரோவாக நடிக்கப் போவதாக வந்த செய்திகளுக்கு சாய் அபியங்கர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,
நான் ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆகிறேன் என்று பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யான தகவல். அதில் துளியும் உண்மையில்லை. எனக்கு நடிப்பில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. ஆனால், எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். அதனால் நடனமாடுவேன். சில விஷயங்கள் திட்டமிட்டு செய்வதை விட, இயற்கையாகவே நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாய் அபியங்கரின் இந்த விளக்கத்தின் மூலம், அவர் தற்போதைக்கு நடிப்பில் ஈடுபடும் எண்ணத்தில் இல்லை என்பதும், தனது முழு கவனத்தையும் இசையமைப்பதிலும், புதிய பாடல்களை உருவாக்குவதிலும் மட்டுமே செலுத்தி வருகிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.

